Tuesday, January 15, 2013

தேரோடும் ராஜபாதை

தேரோடும்  ராஜபாதை 
ஆம்! எனது பாதை  அன்னை மணித்திருநாட்டின்
தொன்னந்தொன் பொருள் காலத்துத் தனிப்பாதை.
என்ன மிஞ்சிநிற்கும்  இந்த  இடர்க்காட்டில்?
இன்பமென்ற  மின்மினி மின்னி மின்னி மறையும்
துன்பக் கானகத்துத் தொலையாப் பெருவழியிலெனத்
 தேர்ந்து தெளிந்த ஞானப்பாதை .
வெந்ததைத் தின்று சேர்ந்ததைப் புணர்ந்து
வேகவைக்கப்பொருள் தேடி
கண்டதெல்லாம்  கொன்று
களித்துக்கூத்தாடிய காட்டுமிராண்டிகளின்
காலத்தடம் விலக்கி
தேரோட்டம் போகிற ராஜபாதை 
சுயத்தின் சொந்த ஒளி நாடிக்
கொடி நாட்டிய பாதை
சோர்வு  பொருட்டில்லை
சோதனை வெருட்டாதெனத்
தேறித்  தேடிக் கண்டறிந்து
கோபுர உச்சியிலேறி
ஏற்பீர் மானுடத்தீர்
தாரக மந்திரமெனக்  கூவி
வழங்கிய வள்ளல்கள் பாதை 
விலக்க முடியாது என்னை
இந்தப் பாதை விட்டு!
விலைக்கும் வாங்கிவிடமுடியாது
வேறு ஆளைப் பாருங்கள் 

எழுந்து வருக புதியதோர் இந்தியா

எழுந்து வருக புதியதோர் இந்தியா
துணையிலாதோர், துன்பத் தொடர்கதையின்
பிரிக்கவியலாத பாத்திரமானோர்,
ஆவி விலைகொடுத்தும்
மாற்றி மாற்றிப் பூட்டும்
அடிமை விலங்குகளை  அகற்ற
வழியறியாதோர் ,
துயரமே வாழ்வின் விதியெனத்
துக்கம் சுமந்து நகர்வோர் சிந்தும்
கண்ணீர்ப் பெருக்கில் நீந்தி
ஊழல் ஓடங்களில் ஒய்யாரமாய்த்
துடுப்பு வலித்து
சொந்தச் சுகம் தேடிக் களிப்போர்
அஞ்சிப் பதறி அகன்று நிற்க,
கானாப் பாட்டில் ஞானோபதேசம்
செய்யும் முகமூடிக் கனவான்கள்
தங்கள் மாயமாலக் கெடு
தீர்ந்ததென விலகிப்போக,
ஆயுதம் ஏந்தியோர் அதோகதியாக,
மதமான மயக்கம் சிருஷ்டித்த
இரணியர்களைத் துவம்சம் செய்ய
மற்றோர் நரசிம்ஹமாக
எழுந்து வருக புதியதோர் இந்தியா!
மானுடமே மஹாசக்தி விளையும்
கருவூலம்  என்று தெளிந்து வீறுற்று
எழுந்து வருக புதியதோர்  இந்தியா

தணல் உறங்கும் தொட்டில்

தீ உறங்குவதால்
தணலைத்தொட்டிலிலிட்டுப் போர்வை போர்த்தித்
தாலாட்டிக்கொண்டிருக்கிறது
விறகாக விருக்கும் வனமரம்

எத்தனை அடையாளங்கள் தொலைந்திருக்கும்

எத்தனை அடையாளங்கள் தொலைந்திருக்கும்

பலர் மிதித்துப் படிந்திருக்கும்
இந்தக் காலடித்தடங்களில்
எது அவளுடையது
எது அவனுடையது?
எத்தனை அடையாளங்கள்
தொலைந்திருக்கும் காற்றும்
அலையும் வருடும்
இந்தக் கரைமணல் வெளியில்?
எனக்குக் கணக்கு வழக்கு வேண்டியதில்லை
அலை ஓடிவந்து அழிக்கிற வரையில்
அதுவோ இதுவோ எனக் 
காதல் இதயம்
பதைபதைக்கிற வேளையில்
ஒவ்வொன்றும் மற்றொன்றாய்
மயக்கிக் கலக்கும்போது
ஆதி பாதம்
பகவத் பாதமென
அருள்வாக்கு வழங்குகிறது
சமுத்திர ஓங்காரம்
காத்திருப்பது அதற்கல்ல
காத்திருக்க வேண்டியோருக்காக 




























































































பகவத் பாதம் 

இந்த நிமிஷமே சத்தியம்

வியர்வை ஒரு வெளியீடு.
கண்ணீர் ஒரு புலப்பாடு
குருதி ஒரு குறியீடு
கூட்டிக் கழித்து
வகுத்துப் பெருக்கி
ஏடு புரட்டிப்  பெருமூச்சு
விட்டு  என்ன புண்ணியம்?
வழித்துஉதறிப் போட்டு 
சுமை களைந்து விளையாடு .
சுருக்கமாய்ச் சொன்னால்
இந்த நிமிஷமே சத்தியம் 

என்ன விலை தந்துவிடுவீர்கள்

என்ன விலை தந்துவிடுவீர்கள் 
என் இதயக் கொதிஉலைவிட்டு
சிதறி வந்துவிழும்
என் கவிதைத் தீப்பொறிக்கு?
தன்னைத் தான் மறந்து
ஆடும் தாண்டவத்தின்
பாதச் சிலம்பொலிக்கு
அதன் நாதத் தொனி
எழுப்பும் சஞ்சாரச் சிலிர்ப்பிற்கு?
தகரமும் தகடுகளுமா?
கிழிகிற பட்டும்
கைமாறும் காகித நோட்டுகளுமா?
தங்கமே ஆனாலும் 
என் கவிதை ததும்பித்
எட்டுகின்ற இன்பவிளிம்பைத்
தொட்டுவிட முடியுமா எதனாலும்?



தரை தொட்ட வானம்

தரை தொட்ட வானம் 
மழை முத்தம் பெற்றதும்
மண் விடும் இன்பப் பெருமூச்சில்
என்ன ஒரு தாபம்!
என்ன ஒருமோகம்!
எப்படி எல்லாம்
மயக்கி மணக்கிறது
தரை தொட்ட வானம்
தூரம் வரையும்
தொடர் ஓவியத்
திரையிலும் ஊடுருவும்
சுகந்த வாசனை 


அடுத்தடுத்த கட்டங்கள்

ஆதியென்றும்  அந்தமென்றும்
இன்பமென்றும்  துன்பமென்றும்
சுபமென்றும்  அசுபமென்றும்
இரண்டிலொன்று மட்டுமேயென்று
இடைநடு என்பதொன்று
இல்லவே இல்லையென்று
மதிமயக்கம் கொண்டதால்
செம்மாந்து  நின்றிருந்தேன்
ஒவ்வோர் அடி வைத்து
ஒவ்வோர் படி மிதிக்கும்போது
இடறுமபோது விளங்கிற்று
யாவுமே தெளிவாக
இடைநடுப் பதிவுகள் தான்
ஒருகால் உயர
மறுகால் கீழிருக்கும்
அடுத்தடுத்த கட்டங்கள் தான்.