தெருத்திண்ணை
அழுக்கு மூட்டை சுமந்து
கடலாடி ஆறுதாண்டி
நான் ஒரு மூடம் என
அலுத்துப் பூண்டியில்
ஒரு தெருத்திண்ணையில்
இறக்கிவைத்து அந்த
சுத்த சிவ சித்தம்
ஏடொன்று ஏதோகண்டு
என்னமோ எழுத
நாடே வந்தது
கூட்டம் கூட்டமாக
வினைதீர்த்துக் கொள்ள
விளக்கம் கேட்க
குன்று மலையேறித்
தேடித் தரிசித்தும்
தீராத பிரச்சினைக்குத்
தீர்வு கேட்க
வழிப்போக்கர்,
தலைவர்,தொண்டர்
குபேரர் கோவனாண்டி,
கொண்டு வந்து கொட்டிய
கவலைக்குப்பைகளால்
மூட்டை பெருத்தது
தெருத்திண்ணை
குருபீடமாகிக் கோயிலாயிற்று.
உள்ளுக்குள் சிரித்தபடி
உருட்டி விழித்து
திருநீறு பூசித்
திருப்பி அனுப்பிற்று
சித்தம் வெளுத்த சிவம்
- வையவன்