Thursday, January 24, 2013

ஆயுதங்கள்

ஆயுதங்கள் 
அவள் கண்கள் என்னை
விழுங்க முயன்றன
ஒரு கணம் ஒரே கணம்
நீச்சல் மறந்த தத்தளிப்பில்
நான் தடுமாறினேன்.
படகிலிருந்து பற்றிக்கொள்ள
ஒரு கயிறு வீசியது போல்
அவள் உதட்டில்
ஒரு சிறு நெகிழ்ச்சி
மீண்டு விட்டேன்
பின் எனது கண்கள்
அவளை விழுங்க விரிந்தன
அவள் விழுந்து விழுந்து
சிரித்தபோது வலை
என் மேல் இறுகியது
விடுபடவே முடியாதவாறு

நாராயணா

நாராயணா
தண்ணீர் பஞ்சம் நிச்சயம்
பாபாக்கள் பஞ்சமே வராது.
ஒரு பாபா போனால்
மறு பாபா தயார்
கை தான் வலிக்கும்
பாபா சென்சஸ் எடுத்தால்
நாராயணன் தான்
மிக மிக மிக அபூர்வம்.
எழுநூறு கோடி
மக்கள் தொகையில்அவன்
எந்த மூலை முடுக்கில்?

மழைத்துளி

மழைத்துளி
நாள் முழுவதும்
சொட்டுகிறது
மழை
பூமி மீது
சிற்பம் செதுக்கும்
உளி போல.
உன் பிரிவின் வலி
போல.
ஓயாமல் துளைக்கிறது.
துளித்துளியாக

விடிந்து விட்டதா பொழுது ?



 விடிந்து விட்டதா பொழுது ?
காலத்தின் யோனிக் குழி விட்டுப்
துள்ளித் துடித்து  வரும் கன்றாக
உதித்திருக் கிறது இன்று
என்ற பெயர் பெற்ற  காலக்குட்டி
இதை வளர்த்துப் பெரிதாக்கிச்
சூரியனில் குளிப்பாட்டி
நிழல்களால் துடைத்து
மத்தியானத்தில் அரியணை ஏற்றி
பொழுது சாயச்சாயச்
போகப்போகிறதே ஐயோ
போகப்போகிறதே என்று மறுகி
அஸ்தமனத்தில் கையாட்டி
புகுந்த வீட்டிற்குப் பெற்ற பெண்ணை

வழியனுப்பி அடுத்த வருகைக்குக்
காத்திருக்கும் சோகம் மீதி நிற்கும்
இந்த இன்றும் ஒரு நாள் தான்
பெற்றதும் இழந்ததும் நம்மைத்
தொட்டில் கட்டித் தாலாட்டத்
தூங்கி விடுகிறோம்.
என்ன ஒரு இனிய கனவு!
இந்த இன்று கண்ட கனவு
வந்ததும் தெரியவில்லை
போனதும் தெரியவில்லை.
விடிந்து விட்டதா பொழுது?

தமிழாய்வு

தமிழாய்வு
சங்க உலைக்கடத்தில்
விழுந்திருக்கிற
சம்மட்டியடிகளுக்குப்
பஞ்சமே இல்லை.
அகம் புறம் என்று
அக்கு அக்காகப்
பிரித்துப்போட்டுவிட்டுப்
பின் கண்ணகி
மணிமேகலை
பட்ட பாட்டை நினைத்தால்
 அப்பப்பா..பதைக்கிறது நெஞ்சு.
இவ்வளவு இன்னல்கள்
தொடருமெனத் தெரிந்திருந்தால்
மதுரையை
எரித்திருக்கவே
மாட்டாளோ கண்ணகி?
ஒன்றும் செய்வதற்கில்லை
என்றுமுளது என் தமிழ்
தாங்கும் எல்லாவற்றையும்
வாழ்க வையகம்
வளர்க தமிழாய்வு.