Thursday, January 24, 2013

விடிந்து விட்டதா பொழுது ?



 விடிந்து விட்டதா பொழுது ?
காலத்தின் யோனிக் குழி விட்டுப்
துள்ளித் துடித்து  வரும் கன்றாக
உதித்திருக் கிறது இன்று
என்ற பெயர் பெற்ற  காலக்குட்டி
இதை வளர்த்துப் பெரிதாக்கிச்
சூரியனில் குளிப்பாட்டி
நிழல்களால் துடைத்து
மத்தியானத்தில் அரியணை ஏற்றி
பொழுது சாயச்சாயச்
போகப்போகிறதே ஐயோ
போகப்போகிறதே என்று மறுகி
அஸ்தமனத்தில் கையாட்டி
புகுந்த வீட்டிற்குப் பெற்ற பெண்ணை

வழியனுப்பி அடுத்த வருகைக்குக்
காத்திருக்கும் சோகம் மீதி நிற்கும்
இந்த இன்றும் ஒரு நாள் தான்
பெற்றதும் இழந்ததும் நம்மைத்
தொட்டில் கட்டித் தாலாட்டத்
தூங்கி விடுகிறோம்.
என்ன ஒரு இனிய கனவு!
இந்த இன்று கண்ட கனவு
வந்ததும் தெரியவில்லை
போனதும் தெரியவில்லை.
விடிந்து விட்டதா பொழுது?

No comments: