Wednesday, July 25, 2012

ஆடை மாற்றுதல்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
ஆடை மாற்றுதல் 
சேலை அவிழ்த்து விட்டு
ஒவ்வொரு பக்கமாக
இடமிருந்து வலமோ
வலமிருந்தோ இடமோ
தலைக்குக் கீழாகவோ
தலைக்கு மேலாகவோ
சேலை முகப்பைப்
பல்லில் கடித்துக்கொண்டு தான்
உள்ளாடை மாற்றவேண்டி வருகிறது
இரண்டிற்கும் இடைப்பட்ட
வேளைகளில் எட்டிப் பார்ப்பவர்கள்
இருந்து விட்டால்
வருகிற எரிச்சலில்
மொத்தத்தையும் கழற்றி
அவர்கள் முகத்தில்
வீசி எறிய த் தோன்றுகிறது
மாற்றங்களுக்கு இடையே
பெரும்பாடு பண்பாட்டிற்குத்தான்
ஆடையானால் என்ன?
கட்சியானால் என்ன?
போட்டுத் தள்ளும் கலாசாரப்
பின்னணியில்!
வையவன் 

அளவெடுக்கும்போது

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அளவெடுக்கும்போது 
எல்லாத் தையல்காரர்களும்
கவனமாகத்தான் அளவெடுக்கிறார்கள்;
மேனியின் மேடுபள்ளங்களில்
பொருந்த வேண்டியவை  எப்படிக்  கச்சிதமாய்
அமர்ந்து பொருந்த வேண்டும்
என்பதை யாரோ ஓர் ஆல்டரேஷன்
தேவைப் படாத
லேடீஸ் டைலர் தான்
அறிந்து வைத்திருக்கிறார்
ஆலய கோபுரத்தில்
கச்சிதமாக கலசத்தை
அமரவைக்கத் தெரிந்த
மேதைச் சிற்பி போல.
சூட்சுமக் கண்ணோட்டம்
வந்து விடாது எல்லோருக்கும்
வையவன் 

மனிதனைத்தேடுகிற மணியோசை

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அழைக்கிறது மணியோசை 
வரவிருக்கிற அடுத்த ரயில்
அடுத்த பூஜைவேளை
அடுத்த கல்வியாண்டு
ஆரம்பமாகிற முதல் நாள்
அருகில் ஒரு சிறைச்சாலையில்
ரோல் காலுக்கு அழைக்கும் மிடுக்கு
சற்றுத்தள்ளி  ஒரு மாணவர் விடுதியில்
உணவருந்த வரச்சொல்லி ஓர் உத்தரவு
'ஐஸ்வண்டி மணியடித்தால்
நான் வந்து நிற்பேன்' என்று
அவள் சொன்ன வாக்கு
என்னென்ன நினைவூட்டி
எங்கெல்லாம் அழைக்கிறது
இந்த மணியோசை?
கிரெம்ளின் மணியோசை
ஏனோ நினைவு வருகிறது
விழுந்து உடையும் முன்பும்
விழாமல் ஒலித்தபோதும் 
எப்படி ஓசையிட்டிருக்கும் அது?
எந்த மணியோசையும் 
நாதத்தின் ரதயாத்திரையாகி 
ஓங்காரத்தைத் தேடுகிறதா?
காதலி மறுத்துவிட்டு வளர்த்தாள் 
'அது மனிதனைத்தேடுகிறது'
உவமை பழையது 
ஆனால் கேட்க  இதமாயிருந்தது.
வையவன் 

ஒரு தகன வேளை

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
ஒரு தகன வேளை 
சவமானவர் காத்திருந்தார்
சடங்கு முடிய
'பார்க்க வேண்டியவங்க
எல்லாம் பாத்தாச்சா?'
கேட்டான் வெட்டியான்
கடைசி வறட்டியை மூடும் முன்
'நீ நிஜமா?'
வெட்டி வீசி எழுந்த மின்னல்
கேட்டது சுடுகாட்டு மின்மினியிடம்
'நான் இன்னும்
தயாராகவில்லை'
முணுமுணுத்தது
காற்றில் படபடத்த தீக்குச்சி
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
ஈர விறகுகளை நோக்கி.
'கொஞ்சம் சும்மா இரு'
ஆட்சேபித்தது புவியீர்ப்பு விசை
அடிக்கிற காற்றைப் பார்த்து.
விறகுக்கட்டைகள் எரிந்தபின்
சிதறும் கரித்துணுக்குகள்
தரை இறங்கவேண்டுமே
என்ற அக்கறையில்
'அடுத்த தேர்தலுக்குள்ளே
மின்மயானம் அமைச்சுத்துத்
தர்ற கட்சிக்குத்தான் நம்ம ஓட்டு'
என்றான் அரசியல் புதுமுகம்
இடி சிரித்தது வடக்கே
சவமானவர் காத்திருந்தார்
எல்லாச் சவங்களையும்
போலத் தகனமாவதற்கு
வையவன்  

கீதோபதேசம்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
கீதோபதேசம் 
காசு தான்
நடத்திக்கொண்டிருக்கிறது
எல்லாக் கூத்தையும்.
நடித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்
விதிக்கப்பட்ட
வேடத்தில் .
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
மனக் கிணற்றின்
உள்ளே ஒரு
பழந்தவளை ஓலம்!
என்ன செய்ய?
கண்டத்தையே கண்டு
தின்றதையே  தின்று
ஓடுவதன் பின்னாலேயே
ஓடி ஓட்ட வேண்டுமே நாளை!
கசக்காமலா போகும்
காசு கட்டளையிட்ட வேஷம்?
முன்பெல்லாம்
சீரகம் புளி மிளகாய்
பூண்டு வெங்காயம் என்று
ஒப்புக்காவது சில உபதேச
ஒப்பனைகள் உண்டு.
இப்போது சுத்த வெளிச்சம்
'கூச்சமே படாதே,
நான் இருக்கிறேன் '
காசு செய்கிறது
கீதோபதேசம்
வையவன் 

அந்தந்த நேரத்து தீபங்கள்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அந்தந்த நேரத்து தீபங்கள் 
குண்டுகள் வெடிக்கும் போர் முனையில்
பூச்சி எறும்புக்கடி பொறுத்து
அவன் காத்திருக்கும்போது
தொலைதூரக் கிராமத்து
அரசமரக் கோயில் மேடையில்
விளக்கேற்றுகிறாள் காதலி
அவளது மின்னும் கண்ணிமை
இங்கே தருகிறது உயிர் வெளிச்சம்
அருகாமையில் கேட்கும்
எதிரியின் நடமாட்டம் நினைவூட்டுகிறது
மறந்து மறந்து போன அவள் கோரிக்கையை
இந்தமுறை தவறக்கூடாது 

அவள் கேட்ட டார்ச் லைட்டை
வாழ்க்கை காத்திருக்கிறது
இந்த விடுமுறையில் அவன்
வீடு திரும்பினால்
வையவன்