Monday, January 28, 2013

வெடி வழிபாடு


வெடி வழிபாடு
வெடி கண்டுபிடித்தவன்
மனமுடைந்து மாண்டான்
வெடி விற்ற காசில்
உலக சமாதானத்துக்கு
உற்சவம் நடத்த
உயில் எழுதிவிட்டு.

விட்டு விடுவார்களா
வழிபாட்டுக் காரர்கள்?

வழிபாடு தொடர்கிறது,
வழிவழியாக,
படிப்படியாக,
வகை வகையாக.
பகை எப்படிக் குறையும்?
வம்சம் விளங்க வேண்டுமே!

பகை மூலதனம்
வெடி வியாபாரம்
அட கிடந்துதான்
போகட்டுமே!
பகை வெடி இரண்டும்.
என்ன கெட்டுப்போயிற்று?
பீதி அதிகரித்தால்
கூட இரண்டு மூன்று
ஆலயங்கள் கட்டி
காப்பாற்றக் கோரிக்கை
கையெடுத்துச் சேவித்து
வெடி வழிபாட்டுக்கு 
ஏற்பாடு செய்தால் போச்சு!

குயிலே குயிலே கூவிவிடு


குயிலே குயிலே கூவிவிடு
குயிலே உனக் கனந்த கோடி
நமஸ்காரம்,
கூவு கூவு என்று குமரன்
வருகைக்குக் கூவியது
ஒரு பழைய பாட்டு

முருகன் தந்த
முத்தச் சுவையின்
எச்சக் கிறுகிறுப்பில்
எந்த வள்ளியோ
இன்னும் வெதும்புகிறாள்!

மாடுமனை போனாலென்ன?
மக்கள் சுற்றம் போனாலென்ன?
கிளியே,உன் குறுநகை போதுமடீ!
பதிலுக்கு ஒரு குமரன் பாட்டு

நாமும் தத்தளிக்கிறோம்
அப்போதைக் கப்போது
எவள் எவளோ
நம்மை அலைக்கழிக்கும்
மனக் கிறுக்கில்

குமரா குமரா வந்துவிடு
குயிலே குயிலே கூவிவிடு
எனக்கும் விடுதலை
தந்து விடு

மீண்டும் கடலுக்கே

மீண்டும் கடலுக்கே 
வனங்கள் அழிந்துத்
தீனி சுருங்கி
விளைநிலச் சாலைக்கு
வருகிற வேண்டாத
விருந்தாளி யானைகளைக்
காட்டை அழித்துக் கவர்ந்து
விரட்டி அடிக்கிற
அதே மனிதனுக்கு
வழிதவறிக்கரையேறிய
ராட்சசச் சுறாமீனை
மீண்டும் கடலுக்கே
அனுப்புகிற கருணை
எப்படி சாத்தியம்?
மனிதமும் மானுடமும்
முரண்பாடுகளில் இணைவதாலா?  

மீண்டும் கடலுக்கே

மீண்டும் கடலுக்கே 
வனங்கள் அழிந்துத்
தீனி சுருங்கி
விளைநிலச் சாலைக்கு
வருகிற வேண்டாத
விருந்தாளி யானைகளைக்
காட்டை அழித்துக் கவர்ந்து
விரட்டி அடிக்கிற
அதே மனிதனுக்கு
வழிதவறிக்கரையேறிய
ராட்சசச் சுறாமீனை
மீண்டும் கடலுக்கே
அனுப்புகிற கருணை
எப்படி சாத்தியம்?
மனிதமும் மானுடமும்
முரண்பாடுகளில் இணைவதாலா?  

முதுகில் மணல் சுமந்த அணில்களின் காலம்

முதுகில் மணல் சுமந்த அணில்களின் காலம் 
முதுகில் மணல் சுமந்த அணில்களின் காலம்
அகதிகள் முகாமில் முடிந்து போனதாக
நையாண்டி  நாடகம்
நடந்துகொண்டிருக்கிறது
நொண்டி நொண்டி கரையில்.
கட்ட வேண்டியிருக்கிறது
பாக்கி சேதுப்பாலம் .
நேற்று நிகழ்ந்தது
இன்றும் தொடரும்
நாளையும் மீளும்.    

ஒரு தோண்டல் ஒரு ஊதல்


ஒரு தோண்டல் ஒரு ஊதல்
ஒரு தோண்டல் ஒரு ஊதல்
பொடி வைத்து ஊதுகிறார்
பொற்கொல்லர்
பாணடியனின் மதுரையோடு
அவர் கெட்டபெயர் போயிற்று

பூமியின் கருவறை குடைந்து
குனிந்து வளைந்து புழுவாய் ஊர்ந்து
எப்போதும் இரவான
இருட்டுக்குள்ளே
தலை விளக்கு மாட்டி

பாறை இடிந்து தலை நொறுங்கும்
அபாயத்தைக் கூடக்
குடிக்கின்ற கஞ்சிக்கு
விற்றுவிட்டுத்தோண்டுகிறான் தொழிலாளி
பதுங்கியிருக்கும் தங்கத்தை.
ஒருபோதும் தீராது
பொன் மயக்கம்

மூசையிலே வேகவிட்டு
உருக்கி வார்த்து
தட்டி நீட்டிக் கம்பியாக்கிக்
தன கண்ணொளியைத் தானம் செய்து 
பொன்மேனி மினுக்குகிறார் பொற்கொல்லர்

காய்கறிக் கடையில் கூட
அந்தக்  கூட்டமில்லை
இறைச்சி மீன் கடையில்
ஏதோ சற்று சுமார்
நகைக்கடையில் பெரு நெரிசல்

கடையின் படியெதிரில்
இரு சக்கரம் முச்சக்கரம்
நாற்சக்கரம் என்று
வண்டிமேல் வண்டி நிற்கத்
திணறும் வாடிக்கையாளர்.
தோண்டிக் கொண்டே இருக்கிறான் தொழிலாளி
ஊதிக் கொண்டே இருக்கிறார் பொற்கொல்லர்

பூமி சுற்றத் தொடங்கியதிலே
இருந்து  உயர்ந்துகொண்டே போகும்
விலையைப் பாராமல்
வேலை வாங்கிக்கொண்டே
சுழல்கிறது பொன்மயக்கம்.

இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும்

இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும் 
இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும்
உலவிய நெடுஞ்சாலை
வெறிச்சிட்டுவிட்டது.
நிலவிய நிலாவெளிச்சம்
குடிபெயர்ந்து விட்டது
விமானம் ஏறி,
வயிற்றுப்பிழைப்பைத் தேடி
கண்கள் தேடி அலைகின்றன
பாலைவனப் பாழ்மணலில்
எங்காவது அவர்களின்
இனிய நிழல் படர்ந்தால்
கையொத்திக் கும்பிட்டு
நெஞ்சுக்குள் முத்தம்சொரிந்து
வழிபாடு செய்ய.
மையெழுதி,உதட்டைச்
சிவக்கவைத்து மூக்குத்திப்
பொன்மின்னச சிரித்த
சிரிப்புகளை பாலைவனத் தாகம்
விலைக்கு வாங்கிக்கொண்டது.
என்னென்னவோ விலைபோய்
எங்கெங்கோ தொலைந்துவிட்டன.
இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும் மட்டும்
இழப்பீடுகள் போல் இரவு வந்ததும்
மின்னுகிறார்கள் நட்சத்திர மனவெளியில் .