Sunday, July 29, 2012

ஞானம் எய்திய மரம்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)   
கிளைகள் விழுதுகள் பறவைகள் 

பறவைகள் பாடிய கிளைகளில் 
பாடல் ஓய்ந்து வருகிறது 
ஒன்றிரண்டில் ஓரிரு தனிமைக் கூவல்கள் 
மரம் உயர்ந்து ஓங்கி 
மூத்து  முதிர்ந்து விட்டது
கிளை விட்டு விழுது நாடி 
இரை தேட வெகு 
தாழ்வாக இறங்கி வரவேண்டிய ய 
பறவைகள் வலிக்கும் இறக்கை 
வேரிலே ஓய்வெடுத்து 
விழுதுகளில் ஊசலாடும் 
குரங்குகளை வேடிக்கை 
பார்த்து விரைந்து 
பறந்து விடுகின்றன 
விருந்தாளிப் பறவைகள். 
மரம் ஞானம் எய்தி 
ஒலி  எழாத மௌனத்தோடு 
திருப்தியுற்று   விட்டது 
கிளை உயர்ந்தால்
விழுது என்று ஊஞ்சலாட 
வருகின்ற சிறுவர் கூட்டம் 
அவ்வப்போது வந்து 
அகன்று விடுகிறது 
பறவைப் பாடல் 
ஓய்ந்த சூனியத்தால் 
வையவன் 


நிர்மூட நிஷ்காம்ய அனுபவம்

வழிபாடு 
என் வழிபாடு துவங்குகையில்
எனக்குள் ஒரு கருங்கல் பாறை
நான்  எதிர்பாராத விதமாய்
கரைந்து துளித்துளியாக்  
கசியத் தொடங்குகிறது ;
அந்தப் பாறையைத் தாங்கும்
இதய சமுத்திரம் ,
கரைசல் துளிகளை
ஒவ்வொரு சொட்டாக
நிதானமாகச் சுவைத்துச்
சுவைத்துப் பருகுகிறது
ஒரு காரணமுமின்றிச்
சிந்தப்பட்டு
எந்த உதவியையும் கோராது
ஒரு முறையீட்டையும்
வெளியிடாது
கரைந்து போகிற பரவசம்
ஒன்றுக்காக மட்டும்
சிந்தப்படுகிற துளிகள் அவை.
நிர்மூட நிஷ்காம்ய
அனுபவம் அதுவென
இதய சமுத்திரமும்  அறியும்
எடையே அற்ற
இறக்கைகள் பெற்று
நெகிழ்ந்து உயர்ந்து
விரிந்து மேலேறி
பிறவியே எடுத்தறியா
லகு லயமான
பரப்பையே எனக்கு
அது பிரசாதிக்கின்றது
நான் பெயர் வைக்கிறேன்
வழிபாடென்று .
வையவன் 

மேலோடுகளின் உள்ளிருந்தது

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)  


சொல் 
சொல்லுக்கு உயிர் 
போய்விடுகிறது 
எண்ணத்தில் இருந்து 
வடிவம் பெற்று 
அண்ணாத்திற்கு  அது 
இறங்கி வருவதற்குள்!
நமக்குக் கிடைப்பது 
அதன் பூத உடல் 
வேர்க்கடலைத் தோல் 
மொச்சைத் தோல் 
போன்ற உறைமூடி 


சொல் சுவாசிக்கும்; 
நாடித் துடிப்பும் உண்டு 
ரத்தம் கூடச் சிந்தும் 
ஒரு வடிவம் பெறுவதற்கு 
அது பாடுபடும் வரை 
வந்து விழுந்ததும் 
அது மாண்டு போகிறது 
அதன் தைக் காணமுடியாத 
நாம் பெரிதும் 
அலட்டிக் கொள்கிறோம் 
பழக்க தோஷம் 
வையவன் 

எட்டிப் பார்க்கும் சுட்டிக் குழந்தை

அம்மா எங்களைக் காணவருவாள் 
அம்மா எங்களைக்  காண வரும்போதேல்லாம்
நாங்கள்  பர்ஸ்ட் லைன்
பீச்சுக்குப் போவோம் 
அப்போது மெரீனா தான் 
செகண்ட் லைன் பீச் 
பால்வெள்ளை மணலை இழந்து
இப்போது சிதிலமாகிவிட்ட 
சென்னைக் கடற்கரையில் நின்று 
வங்காள விரிகுடாவை 
அம்மா வெகுநேரம் வெறித்துப் பார்ப்பாள் 
உடனிருப்போம் நாங்கள் வாய்பேசாது
அவள் மௌனத்திற்கு மரியாதை தந்தபடி
முக்காடிட்டு மேகம் தரும்
முலைப்பாலைக் குடிக்காமல்
முந்தானை ஒதுக்கி
எட்டிப் பார்க்கும்
சுட்டிக் குழந்தை போல
நிலா தெரிவதைக் கண்டு
பெருமூச்சின்றி அவள் சொல்வாள்
'உங்கள் அப்பா உயிரோடிருந்தால்
பேசித் தீர்க்க எத்தனையோ நினைவுகள் !
நேரமே போதாது '
பிறகு உடனே
மறைந்து விடுவாள்
கனவைக் கலைத்துவிட்டு.
அப்பா  போன் கப்பலை
விழுங்கிய சமுத்திரத்தின் மேல் 
ஓரிரண்டு துண்டுகளாவது  மிதக்குமா?
தேடி முடிப்பதற்குள் 
 கண் விழித்துவிடுவோம் 
அம்மா வரப்போகும்
அடுத்த வேளைக்கு ஏங்கியபடி
வையவன்