Sunday, July 22, 2012

மாயா

(தேதி குறிக்கப்பட்ட வனம் - கவிதைத்தொகுதி)
மாயா 
மாயா வரும்போது
கிழக்கு வெளுத்துவிடும்
மாயா புறப்படும்போது
மேற்கு கறுத்திருக்கும்
நட்சத்திரங்கள் முளைத்தனவா என்று
அலட்சியமான ஓரப்பார்வையோடு
பார்த்தபடி அகலும்போது எதறகு
இப்படி ஒரு மண்ணுக்கும் உதவாமல்
இந்த ஜனம் முட்டி மோதி
மாளுகின்றது என்று
கேலி அனுதாபம்
அவள் உதட்டில் பூக்கும்

மாயா ஒரு தமிழ் தெலுங்கு
மலையாள இந்தி நடிகையல்ல
சகல மாயைகளின் தாய் அவள்
உறங்க முயன்றும்
உறக்கத்திற்கு உரிய
உத்திகளைத் தேடியும் தவிக்கிற
அனைவரையும் அவள் அறிவாள் 
சற்று சற்று நின்று
கவனித்துவிட்டுத் தான் போகிறாள்
உறங்கி விழித்து மீண்டும்
உபத்திரவங்களையே சந்திக்கப்போகிற
அவர்களை நினைத்து
அவளது இதழோரம் நெளிகிறது
உறங்கியும் விழித்தும்
பிறந்தும் இறந்தும்
அறியாத அவளுக்கு
எப்படிப் புரியும்
மாயை தரும் வேதனை?
வையவன் 

தேதி குறிக்கப்பட்ட வனம்

தேதி குறிக்கப்பட்ட வனம்
(கவிதைத் தொகுதியில் இருந்து  )
தேதி குறிக்கப்பட்ட வனம் 
வெடிமருந்துச் தொழிற்சாலையின்
தளம் போடுகின்ற பாட்டாளிகள்
கஞ்சி காய்ச்சும்  புகை மணம் வருகிற வனம் இது
தேதி குறிக்கப்பட்ட வனம்
நாளையோ மறுநாளோ
வெட்டுப்படப் போகும்
விவரம் அறியாது
கனி குலுங்குகிறது
இந்த ஈற்றில் .
அவளோடு குலவிக் குலவிப்
பெயர் செதுக்கிய மரத்தில்.
தேங்கிய மழை நீரில் 
விடிகாலை நிலவுப் பிம்பத்தின் 
சித்திரம் கலைக்கிறது காற்று.
நினைவோலம் போல் 
இரைகிறது சிள்வண்டு .
நேரமாவதை நினைவூட்டுகின்றன 
மங்கிவரும் நட்சத்திரங்கள் .
விடிந்ததும் துவங்கி விடும் வெட்டுக்கூலி 
அறிந்தால் அவள் வந்து 
சிந்தப் போகும் கண்ணீரால் 
உயரும் இன்னொரு வனம் 
இருந்த வரை நீடித்த 
எதையெதையோ வாழ்த்தி 
விடைபெறுகிறேன் நான்.
வையவன்