Sunday, January 13, 2013

இனிதினும் இனிது

இனிதினும் இனிது  
இனியது நினை
இனியது கேள்
இனியது பார்
இனியது செய்
இனிதே வழங்கு
இனியதை உண்
இனியதோடு இரு
இனிதாய் உறங்கு
இறுதிக்கு அஞ்சாது
உறுதியாய் இரு.
இனி மாறும் எல்லாம்
இருக்கும் காலம்
போகும் யார்
தடுத்து நிற்கும்
விதியின் வேகம் ?
ஈனக்கவலை உதித்தால்
உதறிப் போடு .
பிறந்தோம் இருந்தோம்
இதனினும் பெரிய
இனியது எது ?
பறவையின் பாட்டும்
காற்றின் கீதமும்
கேட்பதைக் கவனி.
சென்றுகொண்டிருக்கிறது 
வென்றுகொண்டிருக்கிறது
வாழ்வின் போக்கு






கல் கொத்தும் கூட்டம்

கல் கொத்தும் கூட்டம் 
கொத்தக் கல்தேடிப்
பிழைக்க வழி நாடி
கும்பல் கும்பலாகத்
திசை திசையாக ஓடுகின்றது.
எந்த யந்திரம் வந்து
ஜெயித்துவிடும் பசியை ?
வயிற்றைப் பஞ்சத்தை?
கொத்த ஒருவனும்
கூட்ட ஒருத்தியும்
அள்ளிச் சுமக்கச்
சிலருமாய்  நடத்தும்
கஞ்சிப்போர்
நிற்காது  ஒருநாளும்.
தறிமிதித்த நெசவாளி
தாறுமாறாய்க் காலம்
மாறிய போக்கைப் பார்த்தும்
ஊடுபாவை உதறவில்லை.
பொழுது எப்போது
விடியுமென்று ஏர் சுமக்கக்
காத்திருக்கும் உழவன்
உடம்பு வியர்வை 
வற்றவும் போவதில்லை.
பாடுகள் நீங்கப்
பாடும் கவிஞன்
பணிக்கும் ஓயவில்லை.
பரவாயில்லை .எந்தப்
பயன் எதிர்பார்த்து
ஏர்முனை தேய்கிறது?
தறித்தாளம் தொடர்கிறது?
சுத்திமுனை கொத்துகிறது?
தொடரட்டும் வாழ்க்கை.