Friday, January 11, 2013

நினைவுச்சின்னங்கள்

நினைவுச்சின்னங்கள் 
பதின்மூன்றே முக்கால் பில்லியன்
வருடங்களுக்கு முன்
பிறவி எடுத்து
விஸ்வரூபமாக விரிந்து  விரிந்து
வளர்கிற பிரபஞ்சம் பிரசவித்த
சூரியனிடமிருந்து  சிந்திய
ஒரு சொட்டு தான்
நான்கே முக்கால் பில்லியன்
வருட வயசான நம் பூமி 
சுற்றிச் சுழலும்
அதன் பிள்ளைப்பூச்சி
ஓட்டத்தை  ஓரக்கண்ணால்
ஒருக்களித்துப் பார்த்தபடி ,
தலை வால் தேடி
ஓடும் பேரண்டம் கவனிக்கிறது
நாம் நிறுவும்  நினைவுச்சின்னங்களை .
கதிரவனோடு கிரகங்கள்
கூடி நட்சத்திரக்குழந்தைகளோடு
திக்கை இழக்கிற திகைப்பில்
தத்தளித்தால் நமக்கென்ன?
சிற்சில நினைவுகள்
சின்னமிழந்து  சிதறித்தொலைவதை விட
சிறிது நின்று சிரித்துப்பின்
காக்கை எச்சம்,
கழுவும் மழை ,
வருஷத்துக்கு ஒரு மாலை ,
அடுத்துக்  கறுத்துக்
கூலிக்கு நிற்கிற காவல்காரன்
போல் நின்று காணாமல் தான் போகட்டுமே!
கருங்கல்லில் நினைவுச்சிறை
கட்டும் முயற்சி நடக்கட்டுமே!



இட நிரப்பிகள்

இட நிரப்பிகள் 
இட்டு நிரப்புகின்ற
இட நிரப்பியாகி
விட்டது இலக்கியம்
சுண்டல் தின்றவாறு
சூனியம் வெறிக்கிறது
கடற்கரை
எங்கெங்கு காணினும்
சக்தியடா என்றவன் கூட
13ம் நம்பர் ஆழ்வாராகி
இடநிரப்பியாகிவிட்டான்.
அச்சடிக்கும் காகிதத்திற்கு
மரம் வெட்டும்
கூலித் தொழிலாளி
அடுத்தடுத்து 
வெட்டுண்ட மரங்கள்
விட்டுச்சென்ற வெற்றிடம்
நோக்கி வியர்வையை
வழித்தெரிகிறான்.
சுண்டலைப் பொட்டலம்
கட்ட உதவியிருக்கிறது
அவன் உழைப்பு.


காலச்சக்கரம்

காலச்சக்கரம் 
பற்றின்றிப் பற்றின்றித்
தொழில் செய்  என்ற
பகவானின் ஆணையை 
ஆரிய சூழ்ச்சி என்று
ஆங்காரத்தோடு எழுந்து
பற்றைப்  பற்றுப் பற்றென்று
பற்றி பழுதுபட்டது
மானுடத்தில் ஒரு கூறு.
சுற்றுகிறது குயவனின் சக்கரம்
தாறுமாறாய்த்  தலைதூக்கி
நிற்கும் களிமண்ணின்
தலைதட்டி உருவாக்கம்
தருகிறது விரல்நகம்
நின்று கவனிக்க நேரமிருந்தால்
கர்த்தா யார்
கருவி யார்
கர்மா என்ன?
சக்கரத்தின் மேல்
சுற்றிச்சுழலும்
பக்குவம் சொல்லிவிடும்.