அக்கறைகளுக்கு நன்றி
தமிழின் மீது அக்கறை, தமிழ்க்கவிதை மீது அக்கறை,நான் கெட்டுச் சீரழிந்து போய்விடக்கூடாதே என்று என் மீதும் சிறிது சிறிது அக்கறை கொண்ட மஹாத்மாக்கள் பூமியில் இருப்பதால் தான் அது இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று என் சிற்றறிவுக்குச் சமீபத்தில் தான் எட்டியது. அதாவது தமிழில் என் எட்டாவது கவிதைத் தொகுதியும் ஆங்கிலத்தில் எட்டுக் கவிதைத் தொகுதியும் எழுதி வெளியிட்ட பிறகு. .
அடியேன், நாயிற் கடையேன், கவி மகாசமுத்திரத்தில் ஒரு சின்னக் கட்டுமரம் கூட ஓட்டத்தெரியாத கற்றுக்குட்டிக் கவிஞனான சிறியேன், அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் 1967ல் மாலை மயக்கம் என்ற பெயரில் அமுதசுரபியில் முதற் கவிதை எழுதினேன்.அடுத்தடுத்தும் விட்டுவிட்டும் நான் கவிதை எழுதும் அபசாரத்தைப் பொறுத்தருளி ஆனந்தவிகடன், குமுதம்,கல்கி,தீபம் , தாய் என்று சில பத்திரிக்கைகள் என் கவிதைகளைப் பிரசுரித்து ஆதரித்து வந்தன.வருகின்றன.
'தேதி குறிக்கப்பட்ட வனம்'என்ற கவிதைத் தொகுதியைப் படித்துவிட்டு முன்னாள் அரசவைக் கவிஞர் .முத்துலிங்கம் அவர்கள் தொலைபேசியில் பாராட்ட, நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் அவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பாராட்ட, கல்விக்கடல்.பிரேமா நந்தகுமார் அவர்கள் கவிஞர் பட்டமே கொடுத்து ஒரு கடிதத்தில் பாராட்டியான பின்னர் சில மெய்யன்பர்கள் நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என்று கவலையால் புழுங்கினர்
சிறுகதை எழுதியபோது குறுநாவல் நாவல் நாடகம் கட்டுரை வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய விமர்சனம், அறிவியல் நூல்கள் மொழி பெயர்ப்புகள், சிறுவர் நூல்கள் என்று ஏதேதோ எழுதியபோது , கண்டு கொண்டதாகவே காட்டிக்கொள்ளாத, காட்டிக்கொண்டால் தங்கள் கௌரவம் குறைந்து போகும் என்று மெளனமாக இருந்த அந்தப் பெருந்தகைகள், நான் கவிதை எழுதும்போது கொண்ட இக்கவலைக்கு நன்றி.
ஒரு சிறிய நினைவூட்டல்.
சூல் கொண்ட மேகம் மழை பெய்து தான் தீரும்.
அவர்களது அடுத்த விமர்சனம் 'என் கவிதை கவிதையே அல்ல.'
கவிதை அதாவது முதல் கவிதை எழுதப்பட்ட காலம் தொட்டு பாடப்பட்டு வரும் பழைய பல்லவி.அதே பாட்டை சிரமம் பாராது நினைவு கூர்ந்து மீண்டும் பாடுவதற்கு நன்றி.
இது என் கவிதை.
காலத்தோடு நான் விளையாடும் சதுரங்கம்.
வெல்வதோ தோற்பதோ அல்ல விஷயம்.
விளையாட்டு தான் விஷயம்.
விதிகள் என்னுடையவை.ஒரு காலத்தில் புதிய விளையாட்டு புதுக்கவிதை ஆயிற்று.மீண்டும் நினைவூட்டுகிறேன்.
உங்கள் அளவீடுகளுக்கு நன்றி.
உங்கள் அளவீடுகளுக்கு ஏற்ப என் கவிதையை எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் எழுதுங்கள் உங்கள் கவிதைகளை. நான் எழுதிக் கொள்கிறேன் என் கவிதைகளை.அரும்பாடுபட்டு வாங்கியிருக்கிறோமே எழுத்துச் சுதந்திரம்.
அடுத்த விமர்சனம் 'எழுதுவதற்குச் சுலபமாக இருப்பதால் கவிதை எழுதுகிறேன்'.
நன்றி. என் பதில். எந்த எழுத்தும் சுலபமல்ல. எழுதிப்பார்த்தால் தெரியும்.சுலபமானது விமர்சிப்பது . அது சும்மாயிருப்பதற்கு சௌகர்யமான மாற்று.
அடுத்த விமர்சனம் நான் 'ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுகிறேன்.'என் பதில் நான் எந்த அயல்மொழிச்சொல்லையும் பயன்படுத்தவே மாட்டேன் என்று தன்னந்தனித் தமிழ் சார்பில் எந்தச் சபதமும் செய்ததில்லை. என்னைச் சுற்றி எட்டு திசைகள்.அது தவிர மேலே ஒன்று. கீழே ஒன்று. எதுவும் என்னைச் சிறைப்படுத்தவில்லை.விண்வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்குள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன பன்மொழி ஓசைகள். ஒலிகள். கவசமணிந்து கொண்டு கவிதை எழுதுவது அசாத்தியம்.
அடுத்த விமர்சனம் 'என் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது'.
என் பதில். கதைத்துக்கொண்டே கதைகளுக்குக் கல்தா கொடுக்கும் கலை நான் அறியாதது நான் எழுதுகிறேன். அவ்வளவே.நான் எழுதுவதால் தமிழின் இருப்புக்கோ பாதுகாப்புக்கோ எந்த பாதிப்பும் வந்து விடாது. வந்தால் தமிழைக் காப்பாற்றுவதற்கென்றே உயிர் முதல் வங்கிக்கணக்கு நீங்கலாக பிற எல்லாவற்றையும் தியாகம் செய்யவென்றே பலர் க்யூவில் நிற்கிறார்கள்.
வாழ்க தமிழ்மொழி .வாழ்க நிரந்தரம். வாழிய வாழியவே!