Monday, January 14, 2013

ஒரு மூடிய கதவினுள்ளே

ஒரு மூடிய கதவினுள்ளே  
விரிந்து வியாபித்திருக்கலாம்
விண்வெளியில்  நீந்தும் அண்டப்பிரபஞ்சம்.
தெரிவதென்னவோ தெருமுனை,
கடற்கரையின் தொடுமுனை,
கூரை ஓடு விலகிய
சின்னஞ்சிறு துளையின்
ஒளி  ஓடை கசிந்து
தரையில் விழுந்திருக்கும் வெளிச்ச வட்டம்.
அருகில் என்னைத்
தழுவி அணைத்து
வட்டத்தில் விரல் நிழல்
விழக் கண்டு சிரிக்கும்
காதல் மனைவி.
சிறகேற்றுச்சகலமும் தரிசிக்கின்றன
எங்கள் மனங்கள்

ஒரு கிராமத்து வீட்டின் மழைக்காலம்

ஒரு கிராமத்து வீட்டின்   மழைக்காலம்
வானத்தை வெட்டிக்கிழிக்கின்ற
வெறியில் விளையாடிய  மின்னல்கள்
அண்டத்தை உலுக்கி முகவரி கேட்ட இடியோசை
பட்டுப்பட்டென்று வெடித்த பல்புகள்
பற்றியெரிந்த ட்ரான்ஸ்பார்மர்
நிலம்நிலமென்று கட்டிக்காத்தது
போதுமென்று  புறப்பட்டுப் போன
மகராசி பாடையின் பின்
வயிறு வலிக்கக் கத்திச்சென்ற
மகள் கண்ணெதிரில்
போன மகராசியின்  ஒவ்வொரு கால்சுவடும்
கைப்பதமும் பதிந்து வடுப்பட்ட நிலத்தில் 
கதறக்கதறப் பெய்து  தீர்த்தது மழை
யாராரோ  உழன்ற    உளைச்சலாய்

எழுந்தது தவளைக் கூப்பாடு
போனவள் தவமிருந்தது இதற்கல்லவா?



மௌனம் ஒரு தனி மொழி

மௌனம் ஒரு தனி மொழி 
சாந்தம் அதன் தாய்மொழி
கனிவு அதன் கிளைமொழி
குழைவு கொடுக்கும் ம றுமொழி
சிந்திய சிரிப்பு குறுமொழி
கண்ணிலே மின்னும் தேன்மொழி
மொழிக்கூட்டம் சென்று சேரும்
ஆலய விதானம் மௌனம்   

நாற்காலிச் செருக்கு

நாற்காலிச் செருக்கு 
காற்றோட்டம் மாறினால்
பருவநிலை மாறுவது போல்

நாற்காலியின் கீழே
மடித்து வைத்த குடை
தலைக்கு மேலே
உயர்ந்து விரிகிறது
அனந்த சயனத்திற்கு மேலே
விரிந்த படமாக
நடுநிசியானால் என்ன?
நடுப்பகலானால்  என்ன?
 நான்கு கால்களின்
கூட்டணியால்
நிற்கிறது  நாற்காலி
ஒரு கால் முறிந்தாலும்
நாற்காலிச் செருக்கு
முடங்கி மூளிச் சப்தம்
கேட்கிறது.
குடை மடங்கி
பரிதாபக் காட்சியாகிறது
செருக்கின் வீழ்ச்சி 




வாய்க்கு ருசி

 வாய்க்கு ருசி
வாய்க்கு ருசியாக
வடை கோரிக் கரைகிறது
மாநகரக் காக்கை.
விரதமிருந்து வைத்த
படையல் சாதம்
விருப்பமில்லை.
கால மாற்றமா?
நாக்குச்சுவை
பழகிப் போனதாலா?
வகைவகையாய்
அலைய அதற்கும்
தோன்றிவிட்டதா?
 

நான் ஏற்றிய தீபம்

நான் ஏற்றிய தீபம் 
யார் வீட்டிலோ ஒலிக்கிறது
நான் செய்த புல்லாங்குழல்
யார் உலையிலோ வேகிறது
நான் விளைவித்த செந்நெல்
யார் வீட்டிலோ சிரிக்கிறாள்
என் வீட்டில் வளர்ந்த பெண்
நான் ஏற்றிய தீபம்
எனக்கு மட்டுமா உரிமை ?
நான் பேசும் மொழியில்
என் முன்னோர் எழுதிய கவிதை
லண்டன் ரயிலும்
ஜப்பான் ரயிலிலும்
மணிக்கொரு பயணம் போய்
மாற்றாரை மயக்கினால்
வழக்கா போடமுடியும்
காப்பிரைட் கேட்டு ?



ஒரு வருஷம் நல்ல மழை

ஒரு வருஷம் நல்ல மழை 
ஒரு வருஷம் பொல்லாக் 
காற்றால் பொய்த்தது மேகம்
பூரித்தோம் புலம்பினோம்
ஒரு வருஷம் பெரும்  விளைச்சல்
ஒரு வருஷம் காய்ந்து தீய்ந்தது .
கொண்டாடினோம் குமுறினோம்
நிறைந்தது குறைந்ததும்
கொடுத்து வைக்கவில்லையெனப் 

போருக்கு நிற்க முடியாத
வானத்தைப் பார்த்து
மனம் தேற்றிக்கொண்டோம் 
சுழலும் பூமியின்
அச்சு நம் ஆறுதல்
 நிச்சயம் அடுத்துத்
தொடரும் நல்லது