Saturday, February 2, 2013

பன்முக மனிதர்களின் இன்முகம்


பன்முக மனிதர்களின் இன்முகம் 

திரும்பாமலேயே திசைபார்க்க
முகம் வேண்டியிருக்கிறது;
ரேடார் போல.
தொலைநோக்கி போல.
ஒன்றல்ல இரண்டல்ல

ஆறுமுகம்,நான்குமுகம்.
மனித முகம் போதாமல்

மாறுமுகங்கள் தேவையாகின்றன
யானை முகம் சிங்க முகம்
குதிரை முகம் குரங்கு முகம்
அதிகாரத்துக்கு ஒரு முகம்
அடிபணிய ஒரு முகம்
ஆளுமைக்கு ஒரு முகம்
ஊழியத்துக்கு ஒரு முகம்
உறவுக்கு ஒரு முகம்
பகைக்கு ஒரு முகம்
தொட்டிலுக்கு ஒரு முகம்
கட்டிலுக்கு ஒரு முகம்
சொந்தததிற்கு ஒரு முகம்
பந்தத்திற்கு ஒரு முகம்
எந்த முகம் என் முகம்?

தேடாதிருப்பது சுகம்
பன்முக மனிதர்களின்
இன்முகம் சரிப்படுத்துகிறது
பாகுபாடுகளை சிறிதளவேனும்.

பன்முக மனிதர்களின் இன்முகம்


பன்முக மனிதர்களின் இன்முகம் 

திரும்பாமலேயே திசைபார்க்க
முகம் வேண்டியிருக்கிறது;
ரேடார் போல.
தொலைநோக்கி போல.
ஒன்றல்ல இரண்டல்ல

ஆறுமுகம்,நான்குமுகம்.
மனித முகம் போதாமல்

மாறுமுகங்கள் தேவையாகின்றன
யானை முகம் சிங்க முகம்
குதிரை முகம் குரங்கு முகம்
அதிகாரத்துக்கு ஒரு முகம்
அடிபணிய ஒரு முகம்
ஆளுமைக்கு ஒரு முகம்
ஊழியத்துக்கு ஒரு முகம்
உறவுக்கு ஒரு முகம்
பகைக்கு ஒரு முகம்
தொட்டிலுக்கு ஒரு முகம்
கட்டிலுக்கு ஒரு முகம்
சொந்தததிற்கு ஒரு முகம்
பந்தத்திற்கு ஒரு முகம்
எந்த முகம் என் முகம்?

தேடாதிருப்பது சுகம்
பன்முக மனிதர்களின்
இன்முகம் சரிப்படுத்துகிறது
பாகுபாடுகளை சிறிதளவேனும்.

வாக்குச் சீட்டு


வாக்குச் சீட்டு

வாக்குச் சீட்டு
வாக்குச் சீட்டுகளுக்குப்
பிரியா விடை தந்துவிட்டோம்
யந்திரம் வந்துவிட்டதால்.

புண்ணியவான்கள்
பணியாரம் தின்னவும்,
பொல்லாங்குக் காரர்கள்
மண் கவ்விப் போகவும்,
வா.சீ செய்த
சேவை பொன்னானது.

பொதி சோற்றுப் பொட்டலம்
பிரியாணி சாராயம்
காந்தித்தலை நோட்டு
எத்தனை பண்டமாற்றுகளின்
வரலாற்றுச் சின்னமவை?

பெட்டியிலே போட்டபின்
கத்தி துப்பாக்கி
முனைகளிலே அவை
களவாடப் பட்டாலும்,
கைமாறிப் போனாலும்
கவலைப் பட்டதே இல்லை.
வாக்குச் சீட்டு.
குடியாட்சி கொலுவேறக்
கடமையைச் செய்தது.

நற்சாட்சி தந்த அதன்
பொன்னான சேவை
நினைக்கப்படும் என்றென்றும்!

மறுமான்ய குப்பத்தில்

மறுமான்ய குப்பத்தில் 
மறுமான்ய குப்பத்தில்
மக்காச் சோள வயல்களில்
கதிர் தலையாட்டும்போது
பாட்டியுடன்  துணை போன
வழிப் பயண ஞாபகங்களில்
வரவேற்ற மராட்டியர் வீட்டில்
விருந்தாக உண்ட
சோள ரொட்டியும்
எள்ளுச் சட்னியும்
தவறாது இடம்பெறுகின்றன.
காற்று இன்றும் பேசுகிறது.
அன்புக்கு மதம் இல்லை.
நேசத்திற்கு இனம் இல்லை.
 மனசுக்கு வேலியில்லை.
தலையாட்டித் தலையாட்டிச்
சொல்கிறது கதிர்.

காதல் செய்யவே காதலிப்பவர்


காதல் செய்யவே  காதலிப்பவர்
கவிதை ஒரு மோசமான காதலி
அறிந்தார் அறிவர்
அனுபவித்தவர் அறிவார்
காதலியின் தொல்லையை

அசந்தர்ப்பமான வேளையிலும்
அவள் செய்யும் சிருங்காரம்,
ஊடல் மோடி
கைவிட்டு விட்டாயே
என்ற குற்றச்சாட்டு!

கெஞ்சிக் கரைந்துருகி
மண்டியிட்டுப் பிச்சை கேட்டுப்
பாடுபட்ட நேரமெல்லாம்
புறக்கணித்த  மனச்செருக்கு.
பாரதியே புலம்புகிறார்
‘எங்ஙனம் சென்றிருந்தீர்’ என்று
அப்படி ஓர் ஆளுமை முறுக்கு.

குடும்பம் இருந்துவிட்டால்
குடைச்சல் கூடுதல்
சுற்றுப்புறம், உறவு
நட்புச் சூழல்
எல்லோருக்கும்
மண்டையிடி
வயிற்றெரிச்சல்
கழுத்தறுப்பு
‘போகிறது பார் ஒரு
சொரணை கெட்ட
ஜென்மம்!
கவிதை எழுதுகிறானாம் கவிதை..

‘காற்றை விற்று நீரை விற்று
தெருப் புழுதி எருவை விற்று
தினந்தோறும் விற்கிறார்கள்
காகிதக் குப்பை!
இதுவெல்லாம் கவிதையாம்!
இவனெல்லாம் கவிஞனாம்.
விற்கத் தெரிகிறதா பித்துக்குளிக்கு?’
பொதுவாக இதுதான்
வரவேற்பு கவிஞனுக்கு

ஆசை நாயகியின்
மோக மயக்கத்தில்
கட்டுண்ட அடிமைக்கு
எது உறைக்கப்
போகிறது?



உயிர் ஒரு குழலோசை

உயிர் ஒரு குழலோசை 
உயிர் ஒரு குழலோசை
ஒலி இன்பதுன்ப
ஏற்ற இறக்கங்களோடு
நீந்தி நகர்ந்து நின்றுவிடுகிறது.
ஊதுகின்ற உதடுகளும்
ஒலியெழுப்பும் குழலும்
வெளிப்படுவதில்லைலேசில்  .
ஏதோ உண்டு பின்னணியில்
அது மட்டும் புரிகிறது
எனினும் எந்த வேட்கையில் ,
எந்த விளயாட்டுப்போக்கில்
எதை விரும்பும் விழைவில்
உயிரெனும் ஓசை எழுகிறது?
நாத பிந்துவாய் சில நாழிகை
ஓடியாடி நடமாடி ஏன் அடங்குகிறது?
விடை காணவரும்
சித்தர் கணம்
பத்தர் கணம்
முத்தர் கணம்
கணத்துக்குக் கணம்
கணக்கு தப்பி
எண்ணிக்கை மாறுகிறது.
மீண்டும் புரிகிறது
ஊதும் உதடுகளுக்கு
உத்தேசம் வேறேதோ!

சமையல் முடிந்தது

சமையல் முடிந்தது 
சமையல் முடிந்துப்
பரிமாறிச் சாப்பிட்ட நினைவோடு
கைகழுவி மறக்க
விடமாட்டார்கள் விமர்சன
விற்பன்னர்கள்.
என்னென்ன ஐட்டத்தில்
என்னென்ன குறைநிறை
சமுதாயப் பார்வை
எப்படித் தப்பித்தப்பி உப்புக்குப்
பதிலாய் உறைப்பைக்
கூட்டியது அல்லது குறைத்ததென
விமரிசையாக விளம்பாவிட்டால்
அவர்களுக்கென்ன மரியாதை?
ஆனால் அவர்கள் சொல்லி
இவர்கள் சொல்லி
அடுத்த சமையல்
மாறுவதே இல்லை.
ருசி மாற்றத்திற்காகச்
சமைப்போர் சமைக்கிறார்கள்
சாப்பிடுவோர் சாப்பிடுகிறார்கள்
விமர்சகர்கள் விளம்புகிறார்கள்.
ஓஹோ, அப்படியாவென்று
கேட்டபடி வந்தவர்கள்
அகல்கிறார்கள் வந்தவழியில்.
விமர்சகர்வேறு குறி  பார்க்கிறார்.
விமர்சிக்காவிட்டால் அவர்
விமரிசகராக இருக்கமுடியாது.
சிலர் சமைக்கிறார்கள்
பலர் சாப்பிடுகிறார்கள்
சிலர் சாப்பிட்டுவிட்டு
விமரிசகர்களாக ஜீவிக்கிறார்கள்.



எஸ்ரா பவுண்ட்


எஸ்ரா பவுண்ட்

கவிதைகளை எல்லாரும் எழுதுகிறார்கள்
சலிக்கிற அளவு
நீங்கள் எழுதியது குறைவு.
ஆனால் எவ்வளவு பெரிய மனிதர்
எஸ்ரா நீங்கள்?

டி.எஸ்.எலியட்டைக்
கைதூக்கிக் கரை சேர்த்துவிட
எத்தனை பெரிய மனசு
உங்களுக்கு?  

ஒன்று மேலேறினால்
கீழிருக்கும் நண்டுகள்
அதன் காலைப்
பற்றிப் பின்னுக்கு
இழுக்கும் வளை நண்டுகளில்லாததா
உங்கள் ஊர்க் கிணறு?

எஸ்ரா எஸ்ரா எஸ்ரா
எத்தனை வலிய மனிதர்
நீ ங்கள்?

ஆர்.கே. நாராயணை
உலகறியச் செய்த
கிரஹாம் கிரீனைப்
போல?

கவிஞனை விட ரசிகனும்
ரசிகனை விட மனிதனும்
பெரியவன் என உணர்த்திய
உங்கள் சமிக்ஞைக்கு
ஒரு வணக்கம்