எழுந்து வருக புதியதோர் இந்தியா
துணையிலாதோர், துன்பத் தொடர்கதையின்
பிரிக்கவியலாத பாத்திரமானோர்,
ஆவி விலைகொடுத்தும்
மாற்றி மாற்றிப் பூட்டும்
அடிமை விலங்குகளை அகற்ற
வழியறியாதோர் ,
துயரமே வாழ்வின் விதியெனத்
துக்கம் சுமந்து நகர்வோர் சிந்தும்
கண்ணீர்ப் பெருக்கில் நீந்தி
ஊழல் ஓடங்களில் ஒய்யாரமாய்த்
துடுப்பு வலித்து
சொந்தச் சுகம் தேடிக் களிப்போர்
அஞ்சிப் பதறி அகன்று நிற்க,
கானாப் பாட்டில் ஞானோபதேசம்
செய்யும் முகமூடிக் கனவான்கள்
தங்கள் மாயமாலக் கெடு
தீர்ந்ததென விலகிப்போக,
ஆயுதம் ஏந்தியோர் அதோகதியாக,
மதமான மயக்கம் சிருஷ்டித்த
இரணியர்களைத் துவம்சம் செய்ய
மற்றோர் நரசிம்ஹமாக
எழுந்து வருக புதியதோர் இந்தியா!
மானுடமே மஹாசக்தி விளையும்
கருவூலம் என்று தெளிந்து வீறுற்று
எழுந்து வருக புதியதோர் இந்தியா
No comments:
Post a Comment