Friday, January 18, 2013

ஒற்றையடிப் பாதையான ஜீவநதி

ஒற்றையடிப் பாதையான ஜீவநதி
ஒற்றையடிப் பாதைகளாகி
ஒடுங்கி ஓடும்
ஜீவநதிகள் ஒரு நாள்
நாங்களும் சாக்கடைக் கால்வாய்கள்
புதைக்கும் சவக்குழிகளாகிவிடுவோம்
சம்மதமா என மௌனப் பார்வை பார்த்து
தலைகுனிந்து ஓடுகின்றன.
காமராமேன்களைக் கூப்பிட்டு
லொகேஷன் பார்த்து
காதல் காட்சிகளுக்கு
அவை ஒர்க் அவுட் ஆகுமா
என்று கணக்கிடும் தலைமுறையின்
கடைக்கோடியில் நிற்கும் நாம்
என்ன செய்வது?
வசனமோ பாட்டோ எழுத
வாய்ப்புக்கிடைக்குமா என்று
மேல் வானில் வட்டமிடும்
பருந்துக் கூட்டம் பார்த்துப்
பெருமூச்செறியலாம் .உச்சநீதிமன்றம்
பாராளு மன்றம் என முறையிட்டு
மனித உரிமைக் கமிஷன் போல்
நதி உரிமைக்கமிஷன் அமைக்க
மனுப்போடலாம், மாற்று இல்லை
என் கண்மணியே ஜீவ நதியே
நாங்கள் ஜனநாயக பகீரதர்கள்
தேர்தலுக்குக் காத்திருப்பவர்கள்
மன்னித்து விடுங்கள் !

No comments: