Sunday, January 27, 2013

நதியின் உதய கதி

நதியின் உதய கதி 

எத்தனையோ காலத்துக்கு முந்தி
மேகங்களுக்கு அஞ்சல் செய்த
என் பிரார்த்தனையில் கருவாகி
இதயக் கொதி உலையில் உருவாகி
ஏதோ ஒரு சிகரத்தின் கூம்பில்
சிந்திய முதல் கண்ணீர்ச் சொட்டாகி
இறங்கிப் பிரவாகமாகி
இதோ இதோ உதயமாகிறது
என் கங்கா நதி.
சிலுப்பி விரித்த சடாமுடி தேடி
இறங்கி இறங்கி வருகிறாள்
என் மானசகங்கா.
பதுக்கிப் பங்கிட்டு
எனக்கு எனக்கென்றுப்
பிணங்கிப் போரிட்டுப்
பேரின்றி மாண்டுபோவோர்
அவள  உதய உன்மத்தமும் காணவில்லை
பேரிழந்து ஓர் பெரிய ஐக்கியத்தில்
இணைகிற பரமசுகமும் அறிந்ததில்லை
அதோ அதோ கேட்கிறது
அவளை முடிதழுவ வரவேற்ற
ஆரவாரப் பெருநகை
அண்டம் குலுங்க எனக்குள்ளே
எதிரொலிக்கிறது.பரவசம் கவிகிறது.

No comments: