Friday, January 18, 2013

ஆஹா எப்போது வரும் யுகப்புரட்சி?

ஆஹா எப்போது வரும் யுகப்புரட்சி?
அவர் துப்பாக்கி எடுக்கச் சொன்னார்;
இவர் அஹிம்சா பரமோ தர்மா
என்று உபதேச வாக்கியம் அருளி
ஜனநாயக சோஷலிசமாக மாற்ற முயன்றார் .
மற்றொருவர்  கையில்  'உருட்டடா உருட்டு '
என்ற ஞானோபதேச ஜபமாலை
மற்றொரு மகான் கஞ்சாச் சிலும்பியில்
சரணடையச் சொன்னார்.
சற்றுத்  தொலைவில் குழந்தை
பாலுக்கு அழுதது
இல்லறமல்லது நல்லறமல்லவெனச்
சான்றோர் இயம்பிய
வாக்கைப் பரிபாலிக்க
வீட்டு வாடகைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது
ஆஹா எப்போது வரும் யுகப்புரட்சி
என உட்கார்ந்திருக்க முடியாத  
எழுத்துத் தொழிலாளி
நடந்தான் 'மீடியாக்ரிடி' பாதையில்

No comments: