Saturday, July 28, 2012

நீரோடு காற்று நிகழ்த்தும் காதல்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து) 

நீர்க்குமிழிகள் 

குதூகலத்தோடு தான் 
நீர்க்குமிழிகள் மகாவிஷ்ணுவோடு 
போட்டி போடுகின்றன 
அவதாரக் கணக்கு விவகாரத்தில்.
தீமை தோன்றினால் போதுமென 
அவர் மாதிரியே  
காற்று தீண்டினால் போதும் 
சோப்புக் குமிழி சோற்றுலைக் குமிழி 
பொங்கிச் சிரிக்கும் பால் குமிழி 
பல் தேய்த்து வாஷ்பேசினில் 
கொப்புளித்து உமிழ்ந்த குமிழி 
பப்பிள்ஸ் என்ற பெயரில் 
விற்கப்பட்டு பிளாஸ்டிக் குச்சி வழியே 
குழந்தைகளின் ஊது நுணுக்கக் கோணத்தில் 
மிதந்துபோய்ச் சிதறும் பலூன் குமிழி 
கடையில் எண்ணெய் கொதித்ததும் 
கண்விழித்தெழும் கணக்கழிந்த குமிழி 
அலைநுரைகளில் துயிலும் ஆனந்தக்குமிழி 
நீள்கிறது  நீரோடு காற்று 
நிகழ்த்தும் காதல் விளையாட்டு 
தொட்டுப் பிடித்தால் 
விட்டுப் பறப்போமென 
நீர்க்குமிழி காட்டும் 
எழிற்கோலம் மகாவிஷ்ணு மாதிரியே 
நெஞ்சில் சில்லிட்டுச்  செல்கிறது 



வையவன் 

No comments: