Sunday, September 25, 2016

மாற்றுத் திறனாளி

எனக்கும் சில கவிதைகள் பிடிக்கும்
நான் எழுதிய கவிதைகள் அவற்றிலே ஒன்று
மாற்றுத் திறனாளி
--------------------------------
வகுப்பறைக்குள்ளிருந்து
ஜன்னல் வழியே
விளையாடும் அணிலை
வேடிக்கை பார்த்தாள்;
மரக்கிளைக் கிளிகளின் அழகும்,
கொஞ்சும் மழலையும்
ஓடும் மேகங்களோடு
சேர்த்துக் கூட்டிச்சென்றன
ஒரு சுற்றுலாவுக்கு .
உலவச்சென்றாள்
அவள் திரும்பி வர
நேரமாயிற்று
பாடம் வரவில்லை
பாடல் வந்தது
தமிழிலே வந்தது
தமிழோடு தமிழாகத்
தவழ்ந்து வந்தது
------------------------------------------------------------
நூல் தலைப்பு : தேதி குறிக்கப்பட்ட வனம்
ஆசிரியர்: வையவன்
வெளியீடு: அக்டோபர் 2014
பக்கங்கள் :484
வெளியீடு: தாரிணி பதிப்பகம் ,சென்னை-20
தொலைபேசி: 019940120341
விலை: ரூ.500/=
                                                               




Friday, September 23, 2016

எப்போது விடுபாடு வரும் ?

எப்போது விடுபாடு  வரும் ?
அவ்வப்போது
எட்டிப்பார்க்கின்றன
18 மற்றும் 19உடன்
20ம் நூற்றாண்டுகளின்
முற்பகுதிகள்;
என் மனைவியின்
பேச்சினிடையே
கிருத்திகை அமாவாசை
விரதங்களில்,
கண் பூத்துப் போகும்
கார்த்திகைத் தீபங்களில்,
விளக்கு வைத்த
மார்கழி வாசற்படியில்,
வீதியடைத்த
தை பொங்கல்
கோலத்தினிடையே
ஸ்ரீ ராம நவமிக்கும்
ஸ்ரீ கிருஷ்ணஜெயந்திக்கும்
விநாயக சதுர்த்திக்கும்
என் முன், பின் நவீனத்துவங்களைப்
பார்த்துப் பரிகசித்துக்கொண்டு  
புரட்டாசி சனிகளில்
கோவிந்தனுக்குப் படையல் போட்டு
மகா புண்ணியசீலங்களை
காற்றடித்துக் கலைத்துவிடாமல்
கைவைத்துத் தடுத்து ,
இன்றுவரை தனதும்
எனதுமான அடையாளங்களைக்
காப்பாற்றி வருகிறாள்.
வருகின்ற நூற்றாண்டுகள் எதிர்பார்க்கின்றன,
எப்போது விடுபாடு  என்று?
-வையவன்

பௌர்ணமிகள் வீணாகின்றன

பௌர்ணமிகள் வீணாகின்றன
பௌர்ணமிகள் வீணாகின்றன
பால்வெள்ளை ஒளி நதியில்
திளைத்து நீந்தாமல்
எண்ண  இருள் பாலைகளில்
உயிர் தப்ப ஓடும் உலர்வனத்தில்
தட்டுத் தடுமாறித் தவிக்கிறது;
தலை உயர்த்திப்பார்க்காமல்
மயங்கி மருளும் மனித மனம்.
மனம் என்ற ஒன்றை
மயக்காமல் தாலாட்டும்
மகோன்னதம் உலவுகிறது
சிலமணி நேரம் விண்ணிலே
கண்ணுக்குப் படாவிட்டால்
யார் தவறு ?
-வையவன்
  

Thursday, September 22, 2016

தெருத்திண்ணை


                                                                                                 

தெருத்திண்ணை
அழுக்கு மூட்டை சுமந்து
கடலாடி ஆறுதாண்டி
நான் ஒரு மூடம் என
அலுத்துப் பூண்டியில்
ஒரு தெருத்திண்ணையில்
இறக்கிவைத்து அந்த
சுத்த சிவ சித்தம்

ஏடொன்று ஏதோகண்டு
என்னமோ எழுத
நாடே வந்தது
கூட்டம் கூட்டமாக
வினைதீர்த்துக் கொள்ள
விளக்கம் கேட்க
குன்று மலையேறித்
தேடித் தரிசித்தும்
தீராத பிரச்சினைக்குத்
தீர்வு கேட்க

வழிப்போக்கர்,
தலைவர்,தொண்டர்
குபேரர் கோவனாண்டி,
கொண்டு வந்து கொட்டிய
கவலைக்குப்பைகளால்
மூட்டை பெருத்தது
தெருத்திண்ணை
குருபீடமாகிக் கோயிலாயிற்று.
உள்ளுக்குள் சிரித்தபடி
உருட்டி விழித்து
திருநீறு பூசித்
திருப்பி அனுப்பிற்று
சித்தம் வெளுத்த சிவம்
- வையவன்  

Wednesday, September 21, 2016

திருப்பள்ளியெழுச்சி


திருப்பள்ளியெழுச்சி 
----------------------------------------------------------------------
உத்திஷ்ட்டோ உத்திஷ்ட்ட கோவிந்தா கருடத்துவஜா 
உத்திஷ்ட்ட கமலா-காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு 
திருமலையில் உறக்கம் 
கலைந்தான் ஸ்ரீவெங்கடேசன்.
எழுப்புகிறது இங்கிதமாக
நாத யோகினியின் கீதோபாசனை
நூற்றாண்டு கண்டுவிட்டதாமே!
காலம் என் கற்பனைதான்,
எனினும் எத்தனை சீக்கிரம்
கழிந்து போகிறது ஒரு கனவு
அன்னமாச்சார்யன் நினைவு வருகிறது;
கோவிந்தன் புன்னகை புரிகிறான்;
கவிதை கேட்பதும்,
கானவல்லியின் குரல் கேட்பதும்
எத்தனை இனிமை!
வந்துவிடுவார்கள் பரிசாரகர்கள்
வஸ்திரம் களைந்து
மஞ்சன நீராட்டி
லட்சோப லட்சம்
தரிசனங்களுக்குச் சித்தப்படுத்த .
ஆனால் தினம் உதிக்கும்போதெல்லாம்
இந்தக் குரலைக்கேட்டபடி
இன்னும் சில நூற்றாண்டு
கண்திறக்காமல் ரசிக்கலாம்
போல் தான் தோன்றுகிறது
- வையவன் 

ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம்

                                                                           
எழுத்தாளர் ஆர். சூடாமணி 
ஏதோ சொல்லுகிறது ஒரு நாகலிங்க மரம் 
-------------------------------------------------------------
ஏதோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
பாரதி மூலம். 
பூத்தேன் பூக்கின்றேன்
பூத்துச் செல்வேன்
என் மலர்கள் போதும்,
என்னை வெளிப்படுத்த
வேர்விட்டு நின்றேன்,
வருத்தமின்றி வாழ்ந்தேன்,
வேட்கையின்றி விடைபெற்றேன்
சாலையோரச் சந்தடி
கடந்த மௌனமொழியில்
என்னமோ என்னென்னமோ
சொல்லாமல் சொல்லி
உத்தம ஜீவியம்
எப்படி மணக்குமென
உதிர்கின்றன மலர்கள்,
சூடாமணி நினைவுகளாய்.
இவைமட்டுமா இன்னும்
என்னென்னவோவா?
என்னவோ சொல்லுகிறது
ஒரு நாகலிங்க மரம்
-வையவன்
Thanks: The Hindu Metroplus 21-09-16

Tuesday, September 20, 2016

நாமக்கல்லில் வாயுமைந்தன்




நாமக்கல்லில் வாயுமைந்தன்

--------------------------------------------------
வான் காண உயர்ந்து நின்றான்
வாயுமைந்தன் நாமக்கல்லில்;
வழிகேட்டு வந்தவர்க்கு
வாக்கின் செல்வன்
கைகுவித்த செய்கையால்
சைகை காட்டி
ராம நாமம் காக்குமென்று
மௌன மொழி
ஆசிகூறி அருள்வழங்கி
தான் காணும் காட்சி எல்லாம்
காகுத்தன் மாட்சியன்றி
மற்றொன்றில்லை என
நான் நானென்று அகங்கரித்த
இலங்கை வேந்தன்
இன்று போய்  நாளை வரச்சொன்ன
மொழி கேட்டு நாணமுற்றுத்
திரும்பிச் சென்ற திக்கை
நினைவீரெனச் செருக்கறுத்துப்
பணியச் சொன்னான்;.
-வையவன்